வலி.தெற்கு,திருக்கோவிலுக்கு தெரிவானவர்கள் நீக்கம்?

வலிகாமம் தெற்கு, திருக்கோவில் பிரதேச சபைகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து தெரிவானவர்கள் நீக்கம்

by Bella Dalima 30-03-2018 | 7:37 PM
Colombo (News 1st)  வலிகாமம் தெற்கு மற்றும் திருக்கோவில் பிரதேச சபைகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டதால் அவர்கள் நீக்கப்படவுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசு கட்சிக்கு வாக்களித்தமையால் அவர்கள் நீக்கப்பட்டு, புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு தமிழரசுக் கட்சி உள்ளடங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம் என தெரிவித்துள்ள வீ. ஆனந்தசங்கரி, அதற்கு மாற்று அணியாக உதய சூரியன் சின்னத்தில் பல அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில், கட்சியின் கோட்பாடுகளை அறிந்தும் உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வீ. ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். நடைபெறவுள்ள ஏனைய உள்ளூராட்சிமன்ற தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளிலும் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என கோரியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி , இந்த அறிவிப்பை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி 1447 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் கைப்பற்றியது. இதேவேளை, திருக்கோவில் பிரதேச சபைக்காக போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 792 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை மாத்திரம் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.