by Bella Dalima 29-03-2018 | 8:40 PM
Colombo (News 1st)
நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் பதவியை, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றியது.
தலைவர் பதவிக்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேலு யோகராஜூம் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சம்பத் ஜயரத்னவும் பிரேரிக்கப்பட்டிருந்தனர்.
சபையில் 12 பேரின் ஆதரவைப் பெற்ற வேலு யோகராஜ், நுவரெலியா பிரதேச சபையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
உப தலைவராக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கே.டி. சரத்குமார தெரிவானார்.
தேர்தல் முடிவின் படி, ஐக்கிய தேசியக் கட்சி 9 ஆசனங்களையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 5 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றின.
பொத்துவில் பிரதேச சபையின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.எஸ். அப்துல் வாசீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஐவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூவர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஒருவர், சுயேட்சைக்குழுவின் ஒருவரின் ஆதரவுடன் தலைவர் தெரிவு செய்யப்பட்டார்.
பிரதித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெருமாள் பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டார்.
திருக்கோவில் பிரதேச சபையின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராசையா வில்சன் கமலராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன இணைந்து இதன்போது புதிய தலைவரை தெரிவு செய்துள்ளன.
பிரதித் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சின்னத்தம்பி விக்னேஷ்வரர் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, மாத்தளை - யட்டவத்த பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் லால் அத்தநாயக்க இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யட்டவத்த பிரதேச சபையின் தேர்தல் முடிவுகளின் படி, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 9 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 5 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சுயேட்சைக்குழு 1 ஆகியன தலா ஒரு ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன.
இதன்படி, அதிகளவிலான ஆசனங்களைக் கைப்பற்றிய ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் லால் அத்தநாயக்க யட்டவத்த பிரதேச சபையின் தலைவராக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.