சாதாரணதர பெறுபேறுகள்: 9960 மாணவர்கள் A சித்தி

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள்: 9960 மாணவர்கள் A சித்தி

by Staff Writer 29-03-2018 | 2:29 PM
COLOMBO (News 1st) - இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் 9960 மாணவர்கள் A சித்தி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் இந்த தொகை அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் பரீட்சையில் சித்தியடைந்தோரின் எண்ணிக்கை 3.11 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் சுஜீத தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இந்த வருடம் 73.05 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்க்கு தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் 2016 ஆம் ஆண்டை விட இந்த வருடம் கணித பாடத்தில் சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 4.43 வீதத்தால் அதிகரித்துள்ளது. அதனடிப்படையில் 67.24 விதமான மாணவர்கள் கணித பாடத்தில் இம்முறை சித்தியெய்துள்ளனர். கடந்த வருடம் 62.81 வீதமாக மாணவர்களே கணித பாடத்தில் சித்தியடைந்திருந்தனர். நேற்று நள்ளிரவு வௌியாகிய பெறுபேறுகளுக்கு அமைய 6 மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளனர். கம்பஹா ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கசுனி ஹங்சனா தத்சரனி செனவிரத்ன, அதே பாடசாலையை சேர்ந்த சமோதி ரவீசா சுபசிங்க மற்றும் கண்டி உயர் மகளிர் கல்லூரியை சேர்ந்த நவோதயா பிரபாவி ரணசிங்க ஆகியோர் முதலிடத்தை பெற்றுள்ளனர். மேலும் கண்டி மஹமாயா மகளிர் கல்லூரியின் லிமாஷா அமந்தி, மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் ரந்தி லக்பிரியா மற்றும் இரத்தினப்புரி சீவலி மத்திய மகா வித்தியாலயத்தின் கவீஷ பிரதீபாத் ஆகியோரும் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர். அகில இலங்கை ரீதியில் 9 மாணவர்கள் இரண்டாம் இடங்களை பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மிருதி சுரேஷ்குமார் , கண்டி ஹில்வூட் கல்லூரியைச் சேர்ந்த நிசங்ஸா கசுந்தி மற்றும் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் அமந்தி நயனதாரா ஜயசூரிய ஆகியோர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். இதேவேளை பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனை விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படும் என உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார். பாடசாலை பரீட்சார்த்திகள் ஏப்ரல் 7 ஆம் திகதி வரையும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஏப்ரல் 12 ஆம் திகதி வரையும் அதற்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.