அண்மைக்கால கொலைகளின் பின்புலத்தில் இருப்பது யார்?

அண்மையில் இடம்பெற்ற கொலைகளின் பின்புலத்தில் இருப்பது யார்?

by Staff Writer 28-03-2018 | 3:17 PM
COLOMBO (News 1st) - அண்மைக் காலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்றும் கொலைகளுடன் மதுஷ் மற்றும் அங்கொட லொக்காவுடன் கொலை செய்யப்பட்ட சமயன் உள்ளிட்ட பாதாள உலக தலைவர்கள் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் பாதாள உலகக் குழுவினருக்கிடையேயான மோதல்களின் விளைவாக 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்புகளை பேணிவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த குற்றச்செயல்களின் பிரதான சூத்திரதாரி டுபாயில் இருந்து ஏனையோரை வழிநடத்துவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவிசாரணை பிரிவு தெரிவித்துள்ளது. மதுஷ் உள்ளிட்ட வௌிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ள குழுவினரை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்ய விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க பாதாள உலகக் குழு மோதல் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் 24 மணித்தியாலமும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாதாள உலகக் குழுவின் உறுப்பினர்களை கைது செய்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய விசேட பிரிவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனூடாக பாதாள உலக குழுக்களை அழிப்பதற்கான யோசனைகள் பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினருக்கு வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்