கொலை சதி: விளக்கமறியலில் இருந்த இருவர் விடுதலை

மஹிந்த, கோட்டாபய, பொன்சேகாவை கொலை செய்ய சதித்திட்டம்: விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவர் விடுதலை

by Bella Dalima 27-03-2018 | 9:18 PM
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபயகோன் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவர்களை இன்று விடுவித்தார். 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிதரன் என்றழைக்கப்படும் கணகரத்னம் ஆதித்தியன் மற்றும் தம்பி என்றழைக்கப்படும் கந்தவனம் கோகுல்நாத் ஆகியோர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்களுக்கு எதிராக முன்னாள் சட்ட மா அதிபர் ஈவா வனசுந்தரம் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். எனினும், கடந்த 9 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமையால் அவர்களை விடுதலை செய்வதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று அறிவித்துள்ளார்.