பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை

பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

by Staff Writer 27-03-2018 | 8:18 AM
COLOMBO (News 1st) - அணுவாயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து, பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எந்தவொரு உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவதாகவும் அமெரிக்கா, பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டுக்கு வழங்கிய 2 பில்லியன் டொலர் நிதியையும் அமெரிக்கா நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் செயல்பட்டு வரும் பாகிஸ்தானை சேர்ந்த 7 நிறுவனங்கள் அணுவாயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றஞ்சுமத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, அமெரிக்காவின் தொழில் மற்றும் பாதுகாப்பு, வர்த்தக அமைப்பு குறித்த 7 நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை நலன்களுக்கு, முரணாக செயற்படுகின்றமையை அமெரிக்க அரசால் உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது. இந்த நடவடிக்கையானது, அணுசக்தி விநியோக குழுவில் உறுப்பினராக வேண்டும் என போராடும் பாகிஸ்தானுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.