ஆட்ட நிர்ணயம்: கிரெம் கிரீமரை தூண்டியவருக்கு தடை

கிரெம் கிரீமரை ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடத் தூண்டிய அதிகாரிக்கு 20 ஆண்டுகள் தடை

by Bella Dalima 27-03-2018 | 8:35 PM
சிம்பாப்வே கிரிக்கெட் அணித் தலைவரான கிரெம் கிரீமரை ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடத் தூண்டிய அந்நாட்டு அதிகாரி ரஞ்சன் நாயருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பந்தை சேதப்படுத்திய அவுஸ்திரேலிய அணி வீரர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவன அதிகாரியான ஜேம்ஸ் சதர்லண்ட் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாளில் அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியமை கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், கெமரன் பென்க்ரொப்ட் ஆகியோருக்கு ICC-இனால் தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்மித்துக்கு ஒரு போட்டித்தடையும், போட்டியின் முழு ஊதியமும் அபராதமாக விதிக்கப்பட்டதுடன் பென்க்ரொப்டுக்கு 75 வீத அபராதம் விதிக்கப்பட்டது. எனினும், இந்தத் தண்டனை குறித்து திருப்தி அடைய முடியாது என 1983 ஆம் ஆண்டு உலக சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான கர்ட் அசாட் கூறியுள்ளார். இதேவேளை, ஸ்டீவன் ஸ்மித்தின் செயற்பாடு தொடர்பில் சர்வதேச பத்திரிகைகளிலும், இந்திய பத்திரிகைகளிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. The Asian Age, Times of India-வின் முதல் பக்கம் மற்றும் விளையாட்டுச் செய்திகளில் இந்த சம்பவம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதேவேளை, பந்தை சேதப்படுத்திய வீரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். சர்வதேசம் ஏற்றுக்கொண்ட உலக சாம்பியன்கள் பங்கேற்கும் விளையாட்டில் இடம்பெற்ற இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதென அவுஸ்திரேலியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜேம்ஸ் சதர்லண்ட் தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஸ்டீவன் ஸ்மித், டேரன் லீமன், டேவிட் வோர்னர் மற்றும் அணியின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் ஸ்டீவன் ஸ்மித்தை நீக்குவதாக அணி நிர்வாகம் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளது. இன்டியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராக அஜின்கெயா ரஹானே செயற்படவுள்ளார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் இடம்பெறமாட்டார் என்பதால் அவருக்கு பதிலாக மெட் ரென்ஷோவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.