ஐ.நா வில் இடம்பெற்றவை குறித்து பைசர் முஸ்தபா

ஐ.நா மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து பைசர் முஸ்தபா

by Bella Dalima 27-03-2018 | 7:29 PM
Colombo (News 1st) அமைச்சர் பைசர் முஸ்தபா கொழும்பில் நேற்று (26) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது, ஐ.நா மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையில் சகவாழ்வு மற்றும் நீதித்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை பல நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. முன்னேற்றகரமான பயணமொன்றை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துச் சென்றுள்ளது. காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் உள்ளிட்ட சர்வதேசத்தினருக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் ஶ்ரீலங்கா அரசாங்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளமை தொடர்பிலும், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கண்டி மற்றும் தம்புள்ளை சம்பவம் தொடர்பில் சில நாடுகள் கேள்வி எழுப்பியிருந்தன. இந்த சம்பவத்திற்கு பொறுப்புக்கூற ​வேண்டியவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும், சட்டத்தை செயற்படுத்த வேண்டியவர்கள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்காவிடின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இலங்கை அரசாங்கம் அறிவித்தது. 31 /1 பிரேரணை குறித்து வௌிவிவகார அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பில் இலங்கைக்குள் சிலர் தவறான கருத்துக்களை பரப்பியுள்ளனர். இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிபதிகளை அழைத்து நீதிமன்ற கட்டமைப்பொன்றை நிறுவவுள்ளதாகக் கூறியுள்ளனர். இலங்கை அரசியலமைப்பின் பிரகாரமே இந்த பிரேரணை தொடர்பில் இலங்கை அரசாங்கம் செயற்படும் என வௌிவிவகார அமைச்சின் உரையில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் நீதிக்கட்டமைப்பில் சர்வதேச நீதிபதிகள் விசாரணை மேற்கொள்வதற்கான எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பில் இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.