ஹட்டன்டிக்கோயா நகரசபை தலைவராக பாலச்சந்திரன் தெரிவு

 ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவராக சடையன் பாலச்சந்திரன் தெரிவு

by Staff Writer 26-03-2018 | 8:37 PM
COLOMBO (News 1st) - கடும் குழப்பத்திற்கு மத்தியில், ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சடையன் பாலச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டார். ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர், பிரதித் தலைவர் ஆகியோரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டது. நகர சபையின் தலைவரை தெரிவு செய்வதற்காக இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கு சம அளவிலான வாக்குகள் கிடைத்திருந்தன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவின்படி ஹட்டன் டிக்கோயா நகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டு ஆசனங்களையும், ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றின. தேர்தல் முடிவின் பின்னர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு ஆதரவளித்திருந்தது. அத்துடன், இன்றைய வாக்கெடுப்பிற்கு முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொண்டிருந்தது. இதன்படி, வாக்கெடுப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பலமே மேலோங்கியிருந்தது. எனினும், வாக்கெடுப்பின் போது இரு கட்சிகளின் சார்பில் பிரேரிக்கப்பட்டவர்களும் தலா 8 வாக்குகளைப் பெற்றனர். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் செந்தில்ராஜ் சிவதர்ஷினி இன்றைய வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார். வாக்களிப்பில் இரு கட்சிகளும் சம வாக்குகளைப் பெற்றதையடுத்து சபையில் இவ்வாறான நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, நகர சபையின் தலைவரை, குலுக்கல் முறையில் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவராக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சடையன் பாலச்சந்திரன் குலுக்கல் முறையூடாக தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாமிஸ் சனா தெரிவானார். நகர சபையின் தலைவராக தமது கட்சி உறுப்பினர் தெரிவானதையடுத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் ஹற்றன் நகரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, தமது வீட்டின்மீது சிலர் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக இன்றைய வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த செந்தில்ராஜ் சிவதர்ஷினி தெரிவித்தார். இந்த சம்பவத்தின் பின்னர் அவரின் வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் எமது செய்தியாளர் கூறினார். https://www.youtube.com/watch?v=qtnGBjoqefI