துப்பாக்கி கட்டுப்பாட்டை வலியுறுத்தி பேரணிகள்

துப்பாக்கி கட்டுப்பாட்டை வலியுறுத்தி அமெரிக்காவில் பேரணிகள்

by Staff Writer 25-03-2018 | 5:01 PM
COLOMBO (News 1st) - அமெரிக்காவில் துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் அணி திரண்டுள்ளனர். "MARCH FOR OUR LIFE " என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாநிலத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து மக்கள், ஒன்று திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த தாக்குதலில் 17 மாணவர்கள் கொல்லப்பட்டனர். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணியுடன், வொஷிங்டனில் பிரதான கூட்டம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது, உயிரிழந்த மாணவர்களுக்கு 20 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி கட்டுப்பாட்டை கடுமையாக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் மாத்திரமன்றி எடின்பர்க், லண்டன், ஜெனீவா மற்றும் டோக்கியோ, சிட்னி ஆகிய நகரங்களிலும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா முழுவதும், வெளிநாடுகளிலும் 800 பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வொஷிங்டனில் நடைபெறும் பேரணியில் 50 இலட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் அமெரிக்க பெண்களால் நடத்தப்பட்ட பேரணியின் பின்னர் நடைபெறும் பாரிய பேரணியாக இது பதிவாகுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.