கனவான்களின் விளையாட்டிற்கு மீண்டும் களங்கம்

கனவான்களின் விளையாட்டிற்கு மீண்டும் களங்கம்

கனவான்களின் விளையாட்டிற்கு மீண்டும் களங்கம்

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2018 | 7:39 pm

COLOMBO (News 1st) – கனவான்களின் விளையாட்டை மீண்டும் களங்கப்படுத்திய சம்பவம் அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பதிவாகியுள்ளது.

போட்டியின் மூன்றாம் நாளான நேற்று அவுஸ்திரேலிய வீரர் கமரன் பென் க்ரொப்ட், பந்தை சேதப்படுத்தினார்.

அவுஸ்திரேலிய வீரர் கமரன் பென் க்ரொப்ட் மஞ்சள் நிற மணல் கடதாசியைப் போன்ற ஒன்றை காற்சட்டைப் பையிலிருந்து எடுத்து பந்தை சேதப்படுத்தினார்.

அதன் பின்னர் மீண்டும் அதனை மறைக்க முற்பட்ட காட்சி கமராவில் பதிவாகியிருந்தது.

கேப் டவுனில் நடைபெற்ற போட்டியின் போது, பந்தை சேதப்படுத்தியதை பென் க்ரொப்ட் ஒப்புக் கொண்டார்.

பந்தின் தன்மையை மாற்றியதாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மதிய இடைவேளையின்போது நாம் கலந்துரையாடினோம். மைதானத்தில் பந்தின் தன்மையை மாற்றுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனினும் அது வெற்றியளிக்கவில்லை. நடுவர்கள் பந்தை மாற்றினார்கள். இந்த சம்பவம் விளையாட்டரங்கில் உள்ள பிரமாண்ட திரையில் காண்பிக்கப்பட்டபோது நான் குழப்பமடைந்தேன். அதன் பின்னரே, பந்தை சேதமாக்குவதற்கு பயன்படுத்திய டேப்பை மறைப்பதற்கு முயற்சித்தேன்.

இந்தத் திட்டம் தொடர்பில் தாம் ஏற்கனவே அறிந்திருந்ததாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் கூறினார்.

தலைமைத்துவ சபை இதனை அறிந்திருந்தது. பகல் உணவின்போது நாம் இது தொடர்பில் கதைத்தோம். சம்பவம் தொடர்பில் நான் வருந்துகின்றேன். அது விளையாட்டின் அணியின் நற்பெயருக்கும், எனது தனிப்பட்ட நற்பெயருக்கும் ஏற்புடையதல்ல. எனது தலைமையில் கீழ் மீண்டும் ஒரு முறை இத்தகைய குற்றம் நிகழ இடமளிக்க மாட்டேன்.

இந்த சம்பவம் தொடர்பில் தாம் அச்சத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளானதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் பிரதம நிறைவேற்றதிகாரி ஜேம்ஸ் சதர்லன்ட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்ணர் ஆகியோர் அவுஸ்திரேலிய அணியின் தலைவர், உப தலைவர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேய கிரிக்கெட் நிறுவனம் இன்று அறிவித்தது.

தற்போது நடைபெற்று வரும் போட்டியில் அணியை டிம் பெயின் வழிநடத்துவார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரரும், சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சேகர் உள்ளிட்டடோர் நியூஸ்பெஸ்டுக்கு கருத்துத் தெரிவித்தனர்.

இதேவேளை மூத்த கிரிக்கெட் வர்ணனையாளரும், ஊடகவியலாளருமான மஹிந்த விஜேசிங்க இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

கிரிக்கெட் அணிகளை உள ரீதியாக வீழ்ச்சியடையச் செய்வதற்கு அவுஸ்திரேலிய மூன்று வகையான உத்திகளை கையாள்வதாக அவர் குறிப்பிட்டார்.

ஊடகங்கள், ரசிகர்கள், நடுவர்களை அவர்கள் இதற்காக பயன்படுத்துகின்றனர்.

முத்தையா முரளிதரன் மீது குற்றஞ்சாட்டினர். ஷேன் வோர்னை, முரளிதரன் விஞ்சிவிடுவார் என்பதால் அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக மஹிந்த விஜேசிங்க தெரிவித்தார். ஆனால் அவர்களின் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்