ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கடிதம்

ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கும் அவரின் மகளுக்கும் கடிதம்: வட மாகாண ஆளுனரிடம் கையளிப்பு

by Bella Dalima 24-03-2018 | 6:49 PM
Colombo (News 1st) அரசியல் கைதியான ஆனந்த சுதாகரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான மகஜர், வட மாகாண ஆளுனரிடம் இன்று கையளிக்கப்பட்டது. அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் இரண்டு பிள்ளைகளும் அவரின் மாமியாரும் இன்று கொழும்பிற்கு வருகை தந்திருந்தனர். கொழும்பிலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்குச் சென்ற அவர்கள், ஆளுனர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்துக் கலந்துரையாடினர். ஜனாதிபதிக்கு வழங்குமாறு தெரிவித்து வடமாகாண ஆளுனரிடம் இதன்போது மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. இதேவேளை, தனது தந்தைக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கோரி சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். தாயை இழந்து தவிக்கும் தானும் தனது சகோதரனும் தந்தையை எதிர்பார்த்து வீட்டில் தனித்து வாழ்வதாக அந்த கடிதத்தில் சங்கீதா சுட்டிக்காட்டியுள்ளார். தன்னுடைய தந்தையை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு, அவரது தந்தையான ஜனாதிபதிக்கு அறிவிக்கும் படி சத்துரிக்கா சிறிசேனவிற்கு, சங்கீதா கோரிக்கை விடுத்துள்ளார்.