by Bella Dalima 23-03-2018 | 9:15 PM
தெற்கு பிரான்ஸில் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தி, மூன்று பேரைக் கொன்ற பயங்கரவாதியை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
பிரான்ஸின் தெற்கு பகுதியில் உள்ள ட்ரேபெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் (சுப்பர் மார்க்கெட்) இன்று புகுந்த பயங்கரவாதி ஒருவர், அங்குள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த பொலிஸார், வணிக வளாகத்தை சுற்றி வளைத்து, பிணைக் கைதிகளைக் காப்பாற்ற முயன்றனர்.
அப்போது, அந்த நபர் பொலிஸார் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அத்துடன், பொதுமக்களையும் சுட்டுள்ளார். பொலிஸாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதன்போது, பொலிஸாரின் தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் சுப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவரும் வாடிக்கையாளர் ஒருவரும் உயிரிழந்தனர். பத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுப்பர் மார்க்கெட்டினுள் வாடிக்கையாளர்களை பிடித்து வைத்திருந்தபோது, தான் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர் என்றும், பாரிஸ் தாக்குதல் (2015) வழக்கில் முக்கிய குற்றவாளியான சலாஹ் அப்தஸ்லாவை விடுவிக்க வேண்டும் என்றும் கூறியதாகத் தெரிகிறது.
சுப்பர் மார்கெட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக, கார்கஸ்சன் பகுதியில் ஓட்டுநர் ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டு, காரைக் கடத்தி வந்ததாகவும், வழியில் ஒரு பொலிஸ்காரரை அவர் சுட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.