அமெரிக்கா - சீனா இடையே வலுப்பெறும்  வணிக யுத்தம்?

அமெரிக்காவும் சீனாவும் வணிக யுத்தத்திற்கு தயாராகின்றனவா?

by Bella Dalima 23-03-2018 | 7:02 PM
சீன இறக்குமதிப் பொருட்கள் மீதான வரியை அதிகரிக்க ட்ரம்ப் முடிவெடுத்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சி, ஆப்பிள் உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் வரி விதிக்க சீனா திட்டமிட்டுள்ளது. Make America Great Again என்ற வாக்குறுதியுடன் ட்ரம்ப், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை சமீபத்தில் உயர்த்தினார். இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவிகிதமும், அலுமினியம் மீது 10 சதவிகிதமும் வரி அதிகரிப்பு செய்தார். மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியையும் உயர்த்தப்போவதாக மிரட்டி வருகிறார். ட்ரம்ப்பின் இந்த திடீர் வரி உயர்வுக்கு சீனா அதிருப்தி தெரிவித்தது. இதனை அடுத்து, சில நாட்களுக்கு முன்னதாக, அமெரிக்க நிறுவனங்களால் தயாரிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமையைத் திருடி போலியாக பொருட்கள் தயாரிப்பதற்கு சீனா உதவி செய்வதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இதன் காரணமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான வரியை உயர்த்துவது குறித்து ட்ரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் மூலம் 30 பில்லியன் முதல் 60 பில்லியன் அமெரிக்க டொலர் வரை சீனாவிற்கு இழப்பு ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பன்றி இறைச்சி, ஆப்பிள் மற்றும் உலோகப்பொருட்களுக்கு 15 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை வரியை அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. வணிக யுத்தத்திற்கு அமெரிக்கா தங்களை தள்ளி விடக்கூடாது என சீனா குற்றம் சாட்டியுள்ளது.