இளைஞர் பலி: அதிரடிப்படை உறுப்பினர்களுக்கு பிணை

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி: அதிரடிப்படை உறுப்பினர்கள் இருவர் பிணையில் விடுதலை

by Bella Dalima 22-03-2018 | 5:29 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணம் - மணியம் தோட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு அதிரடிப்படை உறுப்பினர்களையும் யாழ். மேல் நீதிமன்றம் இன்று கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவித்துள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றிருந்தது. சந்தேகநபர்கள் நாட்டிலிருந்து வெளியேறக்கூடாது எனவும் மாதாந்தம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்த நீதிபதி இளஞ்செழியன், சந்தேகநபர்கள் நாட்டிலிருந்து வௌியேற அனுமதிக்க வேண்டாம் என கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே, யாழ். அத்தியடியிலுள்ள வர்த்தக நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவரையும் யாழ். மேல் நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்துள்ளது.