தப்பியோட முயன்று நீரில் குதித்தவர் உயிரிழப்பு

மணல் அகழ்வில் ஈடுபட்டோரை சுற்றிவளைத்த பொலிஸார்: தப்பியோட முயன்று நீரில் குதித்தவர் உயிரிழப்பு

by Bella Dalima 22-03-2018 | 10:37 PM
Colombo (News 1st) திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மகாவலி கங்கை - மணலாறு பகுதியில் மணல் அகழ்வதற்காக நேற்று முன்தினம் (20) ஐவர் சென்றிருந்தனர். மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்காக அந்த இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்த போது, தப்பியோடும் நோக்கில் ஐவரும் ஆற்றில் குதித்துள்ளனர். இதன்போது, நால்வர் தப்பியோடியதுடன் ஒருவர் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், நேற்று (21) சடலமாக மீட்கப்பட்டார். கிண்ணியா - பைசல் நகர், ரியாத் நகரைச் சேர்ந்த 17 வயதான அப்துல் ரசாக் ரனீஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். வறுமை காரணமாக கூலித்தொழிலாளியாக மணல் ஏற்றச்சென்ற அப்துல் ரசாக் ரனீஸின் இழப்பினால் அவரின் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மகாவலி கங்கை - மணலாறு பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபடுவதற்கு முயற்சித்த ஐவரே ஆற்றில் பாய்ந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். சட்டவிரோதமான மணல் அகழ்வைத் தடுப்பதற்காக சுற்றிவளைப்பை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் இந்த நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு - முந்தன்குமாரவௌியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட தரப்பினரைக் கலைப்பதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேல் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் கடந்த வருடம் ஜூலை 24ஆம் திகதி பதிவானது. மேல் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதையடுத்து, மணல் அகழ்வில் ஈடுபட்ட சிலர் ஆற்றில் பாய்ந்ததுடன், அதில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் காயங்குடா பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.