இங்கிலாந்துடனான டெஸ்ட்: நியூசிலாந்து முன்னிலை

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து 117 ஓட்டங்களால் முன்னிலை

by Bella Dalima 22-03-2018 | 9:11 PM
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 117 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 58 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழக்க, பதிலளித்தாடும் நியூசிலாந்து இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஒக்லன்டில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து, 58 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் 5 துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டமின்றி ஆட்டமிழந்தனர். இது நியூஸிலாந்திற்கு எதிராக டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் இங்கிலாந்து அணியின் 5 வீரர்கள் ஓட்டமின்றி ஆட்டமிழந்த முதல் சந்தர்ப்பமாகவும் பதிவானது. டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 40 வருடங்களின் பின்னர் நியூஸிலாந்திற்கு எதிராக குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்கு இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்த முதல் சந்தர்ப்பமாகும். அபாரமாக பந்து வீசிய ட்ரென்ட் பௌல்ட் 6 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்தை நிலைகுலையச் செய்தார். டிம் சவுத்தி 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து அணி 8 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. இரண்டாவது விக்கெட்டிற்காக இணைந்த அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் டொம் லெதம் ஜோடி 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஸ்திரப்படுத்தியது. டொம் லெதம் 26 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். டொம் லெதமின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் ஸ்டுவர்ட் பிரொட் டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் மைல்கல்லை எட்டினார். பொறுமையாக துடுப்பெடுத்தாடிய கேன் வில்லியம்சன் 91 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.