முறையற்ற விதத்தில் குப்பை எறிபவர்கள் கைது

முறையற்ற விதத்தில் குப்பை எறிபவர்களை கைது செய்ய நடவடிக்கை

by Staff Writer 21-03-2018 | 11:01 AM
COLOMBO (News 1st) - முறையற்ற விதத்தில் குப்பைகளை எறிபவர்களை கைது செய்வதற்காக சிவில் ஆடையில் பொலிஸ் அதிகாரிகளை கண்காணிப்பில் ஈடுபடுத்த கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் சூழல் பாதுகாப்புப் பிரிவுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளர் லலித் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பொரளை, கொம்பனித்தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் முறையற்ற விதத்தில் குப்பைகள் வீசப்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் சூழல் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணிவரையான காலப்பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகளில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். தரம் பிரிக்காமல் குப்பைகளை எறியும் நடவடிக்கை அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாநகர பதில் ஆணையாளர் லலித் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.