சிவாஜி கணேசனாக நடிக்கும் விக்ரம் பிரபு

சிவாஜி கணேசனாக நடிக்கும் விக்ரம் பிரபு

by Bella Dalima 21-03-2018 | 4:46 PM
நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘நடிகையர் திலகம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசனாக அவரது பேரன் விக்ரம் பிரபு நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். சமந்தா பத்திரிகை நிருபராக வருகின்றார். சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய பல வெற்றிப் படங்களுக்கு கதாசிரியராகப் பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கின்றார். மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாகசைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் சிவாஜி கணேசன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாத இறுதியுடன் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கின்றார். படம் எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி வௌியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.