​ஆனந்தசுதாகரனை விடுவிக்க கோரி கையெழுத்து சேகரிப்பு

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து சேகரிப்பு

by Bella Dalima 21-03-2018 | 7:26 PM
Colombo (News 1st)  அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்று கையெழுத்து சேகரிக்கப்பட்டது. கிளிநொச்சியில் டிப்போ சந்திக்கு அருகாமையிலுள்ள பஸ் நிலையத்திற்கு முன்பாக கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன. பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமது கையொப்பங்களை பதிவு செய்தனர். கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு முன்பாகவும் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், 2008 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, 9 வருடங்களாக மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு 9 வருடங்கள் கழித்து கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இவரின் 36 வயதான மனைவி யோகராணி கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார். சிறைச்சாலை அதிகாரிகளின் அனுமதியுடன் மனைவியின் இறுதிக்கிரியைகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) ஆனந்த சுதாகர் கலந்துகொண்டார். மீண்டும் சிறை நோக்கி புறப்பட்ட ஆனந்த சுதாகரை அவரது பெண் பிள்ளை பற்றிக்கொண்டு பின்னாலேயே சென்றமை பலரையும் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. இதேவேளை, அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிப்பதில் தயக்கம் காட்டுவதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமானம் மிக்கவராகவும் குழந்தைகளின் மீது அன்பு செலுத்துபவராகவும் திகழும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முன்வர வேண்டும் என சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டமையை இந்த கடிதத்தில் அவர் நினைவுபடுத்தியுள்ளார். அத்துடன், சிறுமியொருவரின் அழைப்பை ஏற்று அந்த சிறுமியின் வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, சிறுமியை மனம்குளிரச் செய்தமையையும் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். அப்படிப்பட்ட ஜனாதிபதியால் ஆனந்த சுதாகருடன் அவரின் பிள்ளை சிறைச்சாலை வாகனத்தில் ஏற முற்பட்டமையை ரசிக்க முடியாது என்பதை அறிவதாகவும் சிவசக்தி ஆனந்தன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.