பாராளுமன்ற அமர்வு இன்று

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர வேண்டும் - ஒன்றிணைந்த எதிர்கட்சிகள்

by Staff Writer 20-03-2018 | 6:43 AM
COLOMBO (News 1st) - இன்றைய பாராளுமன்ற அமர்வில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் யோசனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. எனினும் ஒன்றிணைந்த எதிர்கட்சியை சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநாட்டிற்கு சென்றுள்ளதால், அவர்கள் நாடு திரும்பியதன் பின்னர், நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து தீர்மானம் எட்டுவது தொடர்பில் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை நேற்று கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளதுடன், முறிகள் மோசடி தொடர்பான அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி குறித்த அறிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த இரண்டு அறிக்கைகளின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளை நேற்றைய தினம் கட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனினும் இரண்டு அறிக்கைகளின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகள் இதுவரை கிடைக்கவில்லை என கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல கூறியுள்ளார். எவ்வாறாயினும் இந்த விடயம் குறித்து எதிர்வரும் வௌ்ளிக்கிழமை விவாதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.