மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியானார் புட்டின்

மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியானார் புட்டின்

by Staff Writer 19-03-2018 | 4:19 PM
COLOMBO (News 1st) - ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வௌியான முடிவுகளின் பிரகாரம், பாரிய வாக்குகள் வித்தியாசத்தில் விளாடிமிர் புட்டின் வெற்றிப்பெற்றுள்ளார். இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் விளாடிமிர் புட்டின் 76 வீத வாக்குகளை பெற்று முன்னிலையிலுள்ளார். இதன்பிரகாரம் 2012 ஆம் ஆண்டு 64 வீத வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவான புட்டின், இவ்வருடம் அதனை விடவும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய பவல் குருடினன், 12.1 வீத வாக்கினை பெற்றுள்ளார். ஏனைய 6 வேட்பாளர்களும் 2 வீத வாக்குளையேனும் பெற தவறியுள்ளனர். கடந்த வருடங்களில் தமது ஆட்சியில் பல வெற்றிகளை மக்கள் சுவைத்துள்ளமை இந்த தேர்தலினூடாக தௌிவாவதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். எதிர்வரும் 6 வருடங்களுக்கு பின்னர் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவீர்களா என ரஷ்ய ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர்கள் வினவியுள்ளனர். 100 வயதாகும் வரை ஆட்சியில் நிலைத்திருப்பதற்கு தாம் எதிர்பார்க்கவில்லை என விளாடிமர் புட்டின் குறிப்பிட்டுள்ளார். இம்முறை தேர்தலில் வெற்றிப்பெற்ற புட்டின், 2024 அம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகிக்கவுள்ளார். நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு எதிர்கட்சி தலைவர் எல்க்ஸி நவான்லிக்கு சந்தர்ப்பம் கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.