பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் இன்று

ஜெனீவாவில் இலங்கை தொடர்பிலான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் இன்று

by Staff Writer 19-03-2018 | 8:21 PM
COLOMBO (News 1st) - ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் இன்று நடைபெறுகிறது. இலங்கை தொடர்பிலான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் கடந்த வௌ்ளிக்கிழமை நடைபெறவிருந்த போதிலும் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அது இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டதாக ஜெனீவாவிற்காக இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத்த ஆரியசிங்க தெரிவித்தார். இதேவேளை ஐ.நா மனித உரிமை பேரவையின் அமர்வில் கலந்து கொள்வதற்காக வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான இலங்கை குழு ஜெனீவாவை சென்றடைந்துள்ளது. அமைச்சர்களான சரத் அமுனுகம,பைஸர் முஸ்தபா, வௌிவிகார அமைச்சின் அதிகாரரிகள் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் ஜெனீவாவிற்கு சென்றுள்ளனர். இதேவேளை எதிர்வரும் 21 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் ஸெய்ட் ராட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பிலான அறிக்கையை சமர்பித்து உரையாற்றவுள்ளார். பொறுப்புக் கூறல் செயற்பாட்டை முன்னெடுப்பதில் இலங்கை தாமதம் காட்டுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் தெரிவித்திருந்தார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்திருந்த அறிக்கையிலே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. கடந்த மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் மார்ச் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பொறுப்புக் கூறல் தொடர்பில் 30/1 பிரேரணையை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு இரண்டு வருட கால அவசாகம் வழங்கி ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையிலே ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதேவேளை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகளை சந்திப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை மீதான விவாதம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை அமெரிக்காவிற்கு தெரிவிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. இதேவேளை ஶ்ரீங்கா முஸ்லிம் காங்கிரசும் தமது பிரதிநிதியொருவரை ஜெனீவாவிற்கு அனுப்பியுள்ளது. கட்சியின் சர்வதேச விடயங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் சட்டத்தரணி ஏம்.எம் பாயிஸ் நேற்று ஜெனீவா சென்றதாகவும், அங்கு அவர் சர்வதேச நாடுகளின் பிரநிதிகளை சந்தித்து கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிப்பார் எனவும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=1z-uLBx8-c8