ஐ.நாகூட்டத் தொடர்:இலங்கை தூதுக்குழு நாளை பங்கேற்பு

மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழு நாளை பங்கேற்பு

by Staff Writer 18-03-2018 | 8:07 PM
COLOMBO (News 1st) - ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழு, நாளை பங்கேற்கவுள்ளது. இலங்கையின் இணை அணுசரனையில் 2015ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழு தெளிவுபடுத்தவுள்ளது. காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம், காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான சட்டம், அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட, பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலான பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளது. இந்தத் தூதுக்குழுவிற்கு, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமைத்தாங்குவதுடன், ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் சரத் அமுணுகம ஜெனீவாவிற்கு செல்லவுள்ளார். இலங்கை தொடர்பான பிரபஞ்ச காலக்கிரம மீளாய்வு அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, சர்வதேச முன்னணி மனித உரிமைகள் சட்டத்தரணியான Sir Geoffrey Nice, Global Sri Lanka Forumஇன் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக த சிலோன் டுடே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. Yugoslaviaவின் முன்னாள் ஜனாதிபதி Slobodan Milosevic தொடர்பான, சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு, Sir Geoffrey Nice, தலைமைதாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் இணை அணுசரனையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=g8hFk5TO9Bs