வெலிக்கடை தாக்குதல் அறிக்கை கிடைக்கவில்லை

வெலிக்கடை சிறைச்சாலை தாக்குதல் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலில்லை: மனித உரிமைகள் ஆணைக்குழு

by Bella Dalima 16-03-2018 | 4:12 PM
Colombo (News 1st)  வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ், மூவரடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியிருந்தது. எனினும், பொலிஸ் திணைக்களம், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு குறித்த அறிக்கையை வழங்குமாறு எழுத்து மூலம் அறிவித்திருந்ததாக ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகம கூறியுள்ளார். தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தகவலொன்றைக் கோரினால் இரண்டு வாரங்களுக்குள் பதில் வழங்கப்பட வேண்டும். எனினும், அந்த கால எல்லையை 21 நாட்களுக்கு நீடிக்க முடியும் என்பதுடன், கால தாமதம் குறித்து தொடர்புபட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பது அதிகாரிகளின் கடமையாகும். இந்நிலையில், தகவலொன்றைக் கோரி 3 வாரங்கள் கடந்த போதிலும், அது தொடர்பில் எவ்வித அறிவிப்பும் தமக்கு கிடைக்கவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகம கூறியுள்ளார். வெலிக்கடை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவினால் 2015 ஜனவரி 22 ஆம் திகதி குழுவொன்று அமைக்கப்பட்டது. 600 பக்கங்கள் அடங்கிய அறிக்கை 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. எனினும், குறித்த அறிக்கையில் அடங்கியுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கோ அறிக்கையின் பிரதிகளை தொடர்புபட்ட பிரிவினருக்கு அனுப்பவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கவலையளிப்பதாக, நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.கே. லியனகே கூறியுள்ளார். 2012 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி வெலிக்கடையில் இடம்பெற்ற மோதலில் 27 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்