முத்துராஜவெல காணி நிரப்பல் தற்காலிகமாக நிறுத்தம்

முத்துராஜவெல காணி நிரப்பும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் தீர்மானம்

by Bella Dalima 16-03-2018 | 10:29 PM
Colombo (News 1st)  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முத்துராஜவெல பிரதேசத்தின் காணி நிரப்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி, விசாரணையொன்றை ஆரம்பிப்பதற்கு கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். விசாரணை அறிக்கை அடுத்த சில தினங்களுக்குள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. முத்துராஜவெல பகுதியின் 406 ஏக்கர் பகுதி நிரப்பப்படுகின்றமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது. தனியார் நிறுவனமொன்றுக்கு சட்டவிரோதமாக இந்த காணியை நிரப்புவதற்கு, கமநல சேவைகள் திணைக்களம் அனுமதியளித்துள்ளதாக சூழலியலாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். கமநல சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று குறித்த காணியை கண்காணித்தனர். குறித்த தனியார் நிறுவனம் இந்த காணியைப் பெற்றுக்கொள்ள கமநல சேவைகள் திணைக்களத்தின் கம்பஹா மாவட்ட உதவி ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார். எனினும், அந்த திணைக்களத்தின் பமுணுகர பிரதேச முகாமையாளர் அதற்கு எதிர்ப்பு வௌியிட்டுள்ளார். இந்த விடயத்தில் தலையீடு செய்ய வேண்டாம் என மாவட்ட உதவி ஆணையாளர் தமக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பமுணுகம பொலிஸ் நிலையத்தில் அவர் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.