by Bella Dalima 16-03-2018 | 6:12 PM
அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம் அருகில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தை ஒட்டி ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், இந்த சாலையைக் கடப்பது கடினமாகவும், ஆபத்தானதாகவும் இருந்துள்ளது.
இதனால் அந்த சாலையின் குறுக்கே பொதுமக்கள் நடந்து செல்வதற்காக சிறிய பாலம் ஒன்றை அமைக்கும் பணிகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று அந்த 950 டன் எடையுள்ள மேம்பாலம் திடீரென இடிந்து வீழ்ந்தது.
அதன்போது சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கின.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பொலிசார், மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
8 வாகனங்கள் இடிபாடுகளில் சிக்குண்டதாக பொலிசார் கூறியுள்ளனர்.
அந்த வாகனங்களிலிருந்து மீட்கப்பட்ட சிலர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.