ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தில் ஞானசார தேரர் இல்லை

ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதிநிதிகள் குழுவில் ஞானசார தேரர் இல்லை: ஜனாதிபதி ஊடகப்பிரிவு

by Bella Dalima 16-03-2018 | 5:47 PM
Colombo (News 1st)  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜப்பான் விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினராக கலகொட அத்தே ஞானசார தேரர் பங்கேற்கவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளது. கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் இராஜதந்திர விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதிநிதிகள் குழுவுடன் ஜப்பானுக்கு சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணையத்தளங்கள் சிலவற்றின் ஊடாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. எனினும், இந்த பிரசாரமானது வதந்தி என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்திற்கு முன்னரே தனிப்பட்ட சுற்றுலாவின் நிமித்தம் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜப்பான் சென்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜப்பானிலுள்ள இலங்கை தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அந்நாட்டு தேரர்கள் சிலருடன் கலகொட அத்தே ஞானசார தேரரும் பங்கேற்றிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்போது பெற்றுக்கொள்ளப்பட்ட நிழற்படங்களைப் பயன்படுத்தி கலகொட அத்தே ஞானசார தேரர், ஜப்பான் சென்றுள்ள பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் வதந்திகள் பரவுவதாக னாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.