by Bella Dalima 16-03-2018 | 10:15 PM
Colombo (News 1st)
ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இந்த பகிரங்க பிடியாணையைப் பிறப்பித்துள்ளார்.
இலங்கை விமானப்படைக்கு யுக்ரைன் நாட்டிலிருந்து மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை முறையற்ற விதத்தில் உதயங்க வீரதுங்க ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொலிஸாருக்கு அனுப்பி வைக்கும் வகையில், ஆங்கில மொழியில் பகிரங்க பிடியாணையை பிறப்பிக்குமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதவானிடம் கோரிக்கை விடுத்தது.
இதனைத் தவிர யுக்ரைன் நாட்டுப் பிரஜைகள் ஐந்து பேருக்கும் வழக்குடன் தொடர்புடைய விமான சேவை நிறுவனத்திற்கும் வழக்கின் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிட்டு, அவர்களுக்கும் அறிவித்தல் பிறப்பிக்குமாறு நீதவானிடம் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த நபர்கள் மற்றும் குறித்த நிறுவனம் இழைத்துள்ள குற்றம் என்பன தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.