வறுமையின் கோரப்பிடியில் சிக்குண்டுள்ள கிளிநொச்சி

வறுமையின் கோரப்பிடியில் சிக்குண்டுள்ள கிளிநொச்சி மக்கள்

by Bella Dalima 15-03-2018 | 8:48 PM
Colombo (News 1st) 30 வருட யுத்தம் காரணமாக பல்வேறு இன்னல்களை அனுபவித்த மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், மீள் எழுச்சி திட்டங்கள் மூலம் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வறுமை என்னும் கோரப்பிடியிலிருந்து அவர்களால் மீள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் புள்ளி விபரங்களின்படி கிளிநொச்சி மாவட்டம் வறுமைக்கோட்டில் முதன்நிலை பெற்ற மாவட்டமாக விளங்குகிறது. கொழும்பு மாவட்டத்தின் வறுமை நிலை 0.9 வீதமாகக் காணப்படுகின்ற போது, கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலை 18.2 வீதமாகக் காணப்படுகிறது. நீண்டகால யுத்தம், மக்களின் சொத்து இழப்புக்கள், வேலைவாய்ப்பின்மை, பொருட்களின் விலையுயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார ரீதியில் மீள முடியாதவர்களாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் உள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பொன்நகர் கிராமத்தில் முருகேசு கிருஷ்ணவேணி என்ற 65 வயது நிரம்பிய பெண்மணி தரம் 8 மற்றும் 5 இல் கல்வி பயிலும் இரண்டு பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும் தனது பேரப்பிள்ளைகளின் நலனைக் கருத்திற்கொண்டு, மருத்துவ செலவுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றார். அந்தப் பிள்ளைகளின் தாய் குடும்ப சுமை காரணமாக வெளிநாடு சென்றுவிட்ட நிலையில், அவருடனான தொடர்புகளும் அற்றுப்போயுள்ளன. இதனால், இவர்களுக்கு வழங்கப்படும் 3000 ரூபா சமுர்த்தியும் 250 ரூபா அரச உதவிப் பணமுமே இவர்களின் பிரதான வருமானமாகும். பாடசாலையில் கிடைக்கும் ஒருவேளை உணவே இரண்டு பிள்ளைகளினதும் பசியைத் தணிக்கிறது. இவ்வாறு வறுமையின் பிடியில் சிக்குண்டவர்கள் கிளிநொச்சியில் ஏராளம். கிளிநொச்சி விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட மாவட்டமாகும். அங்கு தொடர்ச்சியாக நிலவும் வறட்சியினால் விவசாயம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் இயங்குகின்ற போதிலும், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை இயங்கவில்லை. இதனால், இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புக்களைத் தேடி அலைகின்றனர். கிளிநொச்சி மாவட்டம் வறுமையான மாவட்டம் என்ற நிலை மாற்றப்பட்டு, வளர்ச்சிப்பாதையில் செல்வதற்கான விசேட திட்டமிடல்களை அரசாங்கமும் வடமாகாண சபையும் மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.