லசந்த கொலை: மேலும் சில தகவல்கள் வெளியாகின

லசந்த கொலை தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகின

by Staff Writer 15-03-2018 | 1:10 PM
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் நாட்குறிப்பேடு மற்றும் அவரின் கொலை தொடர்பான பொலிஸ் அறிக்கையிலிருந்த, குறிப்பு ஆகியவற்றை முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணயக்கார அகற்றியுள்ளதாக நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கல்கிஸ்ஸ பிரதம நீதவான் மொஹமட் மிஹையில் முன்னிலையில் இன்று அறிக்கை சமர்பித்த போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான பொலிஸ் இன்ஸ்பெக்டர் திஸ்ஸ சுகதபாலவிடம் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்தின் மூலம் இந்த தகவல்கள் கிடைத்ததாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இதேவேளை, கொலையாளி பயணித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவின் மோட்டார் சைக்கிள் பிரிவின் ஏழு உத்தியோகஸ்தர்களிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோரிடமும் ஏற்கனவே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றுக்கு அறிவித்துள்ளனர். இதேவேளை, லசந்த விக்ரமதுங்கவின் கையடக்கத் தொலைபேசியின் தகவல்கள் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்திடமிருந்து அறிக்கை ஒன்றை பெறுவதற்கு அனுமதி வழங்குமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதவான் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். இந்த வழக்கு தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணயக்காரவிடம் கடந்த எட்டாம் திகதி வாக்குமூலம் பதிவு செய்ய சிறைச்சாலைக்கு சென்ற போது அவர் சோர்வடைந்த நிலையில் இருந்ததால் வாக்குமூலம் பெறமுடியாமல் போனதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். https://www.youtube.com/watch?v=-pXGoc-DgWE