சுதந்திரக்கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி

சுதந்திரக்கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி

by Staff Writer 15-03-2018 | 7:46 AM
COLOMBO (News 1st) - சுதந்திரக்கிண்ண முக்கோண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. பங்களாதேஷூக்கு எதிராக முடிவுக்கு வந்த தனது கடைசி லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி இந்த வாய்ப்பைப் பெற்றது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா சார்பாக ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்காக 70 ஓட்டங்களைப் பகிர்ந்தது. ஷிகர் தவான் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கடந்த சில போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய அணித்தலைவர் ரோஹித் சர்மா அரைச்சதமடித்தார். ரோஹித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்காக 56 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பகிர்ந்தது. ரோஹித் சர்மா 61 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 89 ஓட்டங்களைப் பெற்றார். சுரேஷ் ரெய்னா 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைப் பெற்றது. 177 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி 61 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளையும் இழந்து சிரமத்துக்குள்ளானது. ஆனாலும், நம்பிக்கை அளிக்கும் விதமாக துடுப்பெடுத்தாடிய முஷ்புகிர் ரஹீம் பங்களாதேஷ் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டாலும் 17 ஆவது ஓவர் வரை போட்டி, இரண்டு அணிகளுக்குமே சாதகமாய் தென்பட்டது. முஷ்பிகுர் ரஹீம் இறுதிவரை களத்தில் நின்றாலும் அவரால் பங்களாதேஷ் அணியின் வெற்றியை உறுதிப்படுத்த முடியவில்லை. 20 ஓவர்களில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள இந்தியா 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நாளை இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.