தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்கக்கூடாது

எந்தவொரு உறுப்பினரும் சுயநல நோக்கோடு செயற்படும் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்கக்கூடாது: தமிழர் விடுதலைக் கூட்டணி

by Bella Dalima 15-03-2018 | 6:03 PM
  Colombo (News 1st) ஒன்றிணைந்த தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பில் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு உறுப்பினரும் சுயநல நோக்கோடு செயற்படும் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்கக்கூடாது என தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற போர்வையில், தமிழரசுக் கட்சி பங்காளிக் கட்சிகளின் குரல்களுக்கு செவிமடுக்காது தான்தோன்றித்தனமாக செயற்பட்டதால் மாற்று அணியாக உதயசூரியன் சின்னத்தில் புதிய கூட்டமைப்பு போட்டியிட்டதாக கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட ஒன்றிணைந்த தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பிற்கு கணிசமான இடங்கள் கிடைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி தனிப்பெரும்பான்மை பெறாத காரணத்தினால் ஏனைய கட்சிகளின் ஆதரவைத் தேடுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணி குறிப்பிட்டுள்ளது. எந்த நோக்கத்திற்காக புதிய அணி உருவாக்கப்பட்டதோ அதனை அடைவதற்காக தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து ஏனைய கட்சிகளுடன் இணைந்து சபைகளின் அதிகாரங்களைக் கைப்பற்ற வேண்டியதன் அவசியத்தை கூட்டணியின் செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். சுயநல நோக்கோடு செயற்படும் தமிழரசுக் கட்சிக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் 30 சதவிகித வாக்குகளே கிடைத்துள்ளதாக வீ. ஆனந்தசங்கரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.