''நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை''

''நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை'' - ரஜினி

by Staff Writer 14-03-2018 | 12:37 PM
COLOMBO (News 1st) - நடிகர் ரஜினிகாந்த் காவிரி போன்ற அனைத்து பிரச்சினைகளிலும் அமைதியாக இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்திற்கு நான் முழு நேர அரசியல் வாதியாகவில்லை என்று ரஜினிகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் ரஜினியும், கமலும் போட்டி போட்டுக் கொண்டு களம் இறங்கி உள்ளனர். சினிமாவில் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இருவரும் அரசியலில் முட்டி மோத தொடங்கியுள்ளனர். அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின்னரும் ரஜினி, கமல் இருவரது கருத்துக்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளாத வகையிலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் காவிரி பிரச்சினையில் எந்த கருத்தும் கூறாத நடிகர் ரஜினி காந்த் பற்றி கமலிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ரஜினி அனைத்து பிரச்சினைகளிலுமே இதுபோன்றுதான் இருக்கிறார் என்று கமல் திடீரென குற்றம் சாட்டினார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ள ரஜினி சென்னை திரும்பிய பிறகே கமலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினியோ தனது ஆன்மீக பயணத்தின் போதே அதற்கு பதில் அளித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்றிருந்த ரஜினியிடம், கமலின் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து ரஜினி:-
''நான் இன்னும் கட்சியை தொடங்கவில்லை. ஆன்மீக பயணமாக இங்கு வந்துள்ளேன். அரசியல் குறித்து இப்போது எதுவும் பேச விரும்பவில்லை. நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை''
என்று கூறியுள்ளார் கடந்த ஆண்டு இறுதியில் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இதன்பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தந்த நல்லாட்சியை தருவேன் என்றும் கூறினார். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பவே அரசியலுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் ரஜினியின் அரசியல் பயணம் கமலை மிஞ்சும் வகையில் வேகமெடுக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினியோ, நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை என்று வெளிப்படையாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை சோர்வடைய செய்துள்ளது. தங்கள் தலைவர் எப்போது முழுநேர அரசியல்வாதி ஆவார் என்கிற எதிர்பார்ப்பும் அவர்கள் மத்தியில் ஏற்பட தொடங்கி உள்ளது.