Colombo (News 1st)
WhatsApp மீது விதிக்கப்பட்டுள்ள தடையை இன்று (14) நள்ளிரவு முதல் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நாட்டின் பாதுகாப்பு நிலையை ஆராய்ந்ததன் பின்னர், ஜனாதிபதி செயலாளருக்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
கண்டி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கடந்த வாரத்தில் ஃபேஸ்புக், WhatsApp மற்றும் வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்தது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, நேற்று நள்ளிரவு முதல் வைபர் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளதுடன், இன்று நள்ளிரவு முதல் WhatsApp பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்படவுள்ளது.
எனினும், ஃபேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையைத் தளர்த்துவது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.
இன்றிரவு நாட்டிற்கு வருகை தரவுள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன், ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, நாளை (15) கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
அதன் ஊடாக பேஸ்புக் மீதான தடையை நீக்குவதற்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகளை முன்னெடுக்க முடியும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.