பணிப்பகிஷ்கரிப்பிற்கு தயாராகும் நில அளவையாளர்கள்

அரச நில அளவையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பிற்கு தயாராகி வருகிறது

by Bella Dalima 14-03-2018 | 9:59 PM
  அரச நில அளவையாளர்கள் சங்கம் இன்றிலிருந்து தொடர் பணிப்பகிஷ்கரிப்பிற்குத் தயாராகி வருகிறது. விலை மனு முறைகளுக்கு மாறாக அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றின் மூலம் நில அளவையாளர் திணைக்களத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கை இடம்பெறுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு கட்டங்களின் கீழ் நாட்டின் காணிகளை அளவீடு செய்து, தரவுக் கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்காக இந்த திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் Trimble Navigation Ltd. என்ற நிறுவனம் 170 மில்லியன் அமெரிக்க டொலர் திட்ட யோசனையை முன்மொழிந்துள்ளதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அமைச்சரவைப் பத்திரம் பிரதமர் தலைமை வகித்த பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை உப குழு ஊடாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு குறித்த நிறுவனத்துடன் கலந்துரையாடியதன் பின்னர் அந்தத் தொகையை 154 மில்லியன் டொலர் வரை குறைப்பதற்கான வாய்ப்புக் கிடைத்ததாக கயந்த கருணாதிலக்கவின் அமைச்சரவைப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, குறித்த நிறுவனம் கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து டெலவயார் மாநிலத்தில் மீள பதிவு செய்யப்பட்டு அதன் பெயர் Trimble Inc. என மாற்றப்பட்டுள்ளது. இந்த யோசனை தொடர்பில் அமைச்சரவையில் கண்காணிப்புகளை சமர்ப்பித்த நிதி அமைச்சர் மங்கல சமரவீர நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டமை தொடர்பில் தௌிவுபடுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியிருந்தார். குறைந்த செலவில் முன்னோடி திட்டமொன்றுக்கான அனுமதியை வழங்க முடியும் எனவும் நிதி அமைச்சர் யோசனை முன்வைத்திருந்தார். எவ்வாறாயினும், 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது. முதற்கட்டத்தின் கீழ் Trimble நிறுவனம் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 2.5 மில்லியன் காணிகளை அளவீடு செய்து, வரைபடம் தயாரித்து, தரவுக் கட்டமைப்பொன்றைத் தயாரித்துள்ளது. இரண்டாம் கட்டத்தில் மேல் மாகாணத்தில் உள்ள 2.5 மில்லியன் காணிகள் அளவீடு செய்யப்படவுள்ளன. அமெரிக்க நிறுவனம் 154 மில்லியன் டொலர் மதிப்பீட்டில் இந்தத் திட்டத்தை தயாரித்தாலும், 40 மில்லியன் டொலருக்கும் குறைவாக இந்தத் திட்டத்தை செயற்படுத்த முடியும் என அரச நில அளவையாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.