by Staff Writer 14-03-2018 | 7:28 AM
COLOMBO (News 1st) - பணிப்பகிஷ்பகரிப்பு தொடர்பில் இன்று மற்றுமொரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 15 நாட்கள் கடந்துள்ள போதிலும் உயர்கல்விக்கு பொறுப்பான எந்த அதிகாரிகளும் தம்முடன் இது தொடர்பில் கலந்துரையாடவில்லையென சம்மேளனத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டின் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழுள்ள 15 அரச பல்கலைக்கழகங்கள், மூன்று வளாகங்கள் மற்றும் 18 உயர் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நாட்டிலுள்ள பல்கலைக்கழக கட்டமைப்பிற்குள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சுமார் 2 இலட்சம் மாணவர்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சின் செயலாளர் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரோ இந்த விடயம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக நாம் மேற்கொண்ட முயற்சிகள் பலனிக்கவில்லை.
மாதாந்த நிலுவை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி 15,000 மேற்பட்ட கல்வி சாரா ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
2016 ஆம் ஆண்டு உடன்பாடு காணப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள கல்வி சாரா ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.