செங்கடலெனத் திரண்ட விவசாயிகள்: கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து 180 கி.மீ தூர பிரம்மாண்ட நடைபயணம்

செங்கடலெனத் திரண்ட விவசாயிகள்: கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து 180 கி.மீ தூர பிரம்மாண்ட நடைபயணம்

செங்கடலெனத் திரண்ட விவசாயிகள்: கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து 180 கி.மீ தூர பிரம்மாண்ட நடைபயணம்

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2018 | 7:20 pm

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த மகாராஷ்டிர விவசாயிகளின் 180 கிலோ மீட்டர்கள் தூர பிரம்மாண்ட நடைபயண பேரணி முடிவுக்கு வந்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை (06) மகாராஷ்டிர மாநிலம் – நாசிக் மாவட்டத்திலிருந்து அம்மாநில சட்டசபையை முற்றுகையிடுவதற்காக மும்பையை நோக்கிப் பயணிக்க தொடங்கிய விவசாயிகள் நேற்று காலை மும்பையை சென்றடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மாநில அரசு தங்களின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டுமென்றும், விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டுமென்றும், எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி இந்த பேரணியை நடத்தினர்.

குறிப்பாக இந்த பேரணியில் பங்கேற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடியின விவசாயிகள் ஆவர். காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யும் இவர்களின் நிலவுரிமை வனத்துறையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எனவே, நிலவுரிமை, கடன் தள்ளுபடி மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை வலியுறுத்தி விவசாயிகள் இப்பேரணியில் பங்கேற்றனர்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கையில் செங்கொடி ஏந்திக் கிளம்பிய சுமார் 50,000 பேர் உணவிற்காகவும் தண்ணீருக்காவும் இரவு உறக்கத்திற்காகவும் மட்டுமே தரித்து நின்று விட்டு நடை பயணத்தைத் தொடர்ந்தனர்.

இதனையடுத்து, விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை மகாராஷ்டிர மாநில அரசு ஏற்றுக்கொள்ள முன்வந்தது.

வனப்பகுதி நிலங்களை விவசாயிகளுக்கு மாற்றும் உரிமை தொடர்பான பிரச்சினை 6 மாதத்திற்குள் தீர்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட கடன்களை இரத்து செய்வது தொடர்பான பிரச்சினை பற்றிய கலந்துரையாட குழுவொன்று அமைக்கப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்