COLOMBO (News 1st) - ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கை தொடர்பிலான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித் அல் ராட் ஹுசைன் சமர்பிக்கவுள்ளார்.
அறிக்கையில் உள்ள விடயங்களுக்கு பதில் அளிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநி ரவிநாத்த ஆரியசிங்க தெரிவித்தார்.
பொறுப்புக் கூறல் செயற்பாட்டை முன்னெடுப்பதில் இலங்கை தாமதம் காட்டுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஸெய்ட் ராட் அல் ஹூசைன் தெரிவித்திருந்தார்.
ஐ.நா மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்திருந்த அறிக்கையிலே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் மார்ச் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பொறுப்புக் கூறல் தொடர்பில் 30/1 பிரேரணையை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு இரண்டு வருட கால அவசாகம் வழங்கி ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையிலே ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இதேவேளை ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மெனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரநிதிகளை அண்மையில் சந்தித்திருந்தார்.
மேலும், இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத்த ஆரியசிங்கவிடம் நாம் இன்று வினவினோம்
21 ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்விற்கு வௌிவிவகார அமைச்சர் இலங்கை குழுவிற்கு தலைமைத்துவம் வழங்குவார். இம்முறை எவ்வித பிரேரணைகளும் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படுவதில்லை. எனவே ஒவ்வொரு நாடுகளும் தங்களது நிலைப்பாடுகளை வௌியிடும். எமது கலந்துரையாடல்களின் படி சிரமமான விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை எடுக்கும் முயற்சி தொடர்பில் பெரும்பாலான நாடுகள் பாராட்டியுள்ளன. அத்துடன் எமது செயற்பாட்டின் வேகம் தொடர்பில் சில நாடுகள் விமர்சனங்களையும் தெரிவித்துள்ளன.
https://www.youtube.com/watch?v=B7wOWuENpUY