by Staff Writer 12-03-2018 | 8:39 PM
COLOMBO (News 1st) - தமது உறவுகளை தொலைத்துள்ள மக்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் வகையில் காணாமல் போனோர்களுக்கான அலுவலகம் விரைவில் முழுமையாக செயற்படும் என எதிர்பார்ப்பதாக ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மென் இலங்கைக்கான மூன்று நாட்கள் விஜயத்தை நேற்று நிறைவு செய்திருந்தார்.
ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க , அமைச்சர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரநிதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
வலுக்காட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதலில் ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலம் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் இவர் இதன்போது பாராட்டுக்களை தெரிவித்தார்.
காணாமல்போதல் தொடர்பிலான ஏனைய விடயங்கள் குறித்தும் அரசாங்கம் விரைவில் செயல்பட வேண்டும் என ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அரசியலமைப்பு, உண்மையை கண்டறிதல், நல்லிணக்கம், மீள நிகழாமை பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் வழங்கியுள்ள ஜனநாயக கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை பாதுகாப்பதற்காக உறுதியாக செயற்பட வேண்டும் எனவும் ஜெப்ரி பெல்ட்மன் குறிப்பிட்டுள்ளார்.
திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் கால அட்டவனை ஒன்றை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற வன்முறைகள், சட்டத்திற்கு எதிரான செயற்பாடுகள், முஸ்லிம்கள் மற்றும் அவர்களது சொத்துக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் நாயகம் வன்மையாக கண்டித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் தனது அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்வதாகவும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் அரசாங்கம்
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் நிகழக்கூடாது என ஜெப்ரி பெல்ட்மன் மேலும் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=uPSsr3RKeR4