நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான காலநிலை

நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான காலநிலை

நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான காலநிலை

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2018 | 12:35 pm

COLOMBO (News 1st) – நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான காலநிலை நிலவுகின்றது.

மேலும் இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் பலத்த மழை காரணமாக மட்டக்களப்பு ஆஞ்சனேயபுரம் மற்றும் முராவோடை தமிழ் கிராம சேவையாளர் பிரிவுகளில் 17 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆஞ்சனேயபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வீடுகளில் வௌ்ள நீர் புகுந்துள்ளதால் 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.

அத்துடன் முராவோடை தமிழ் கிராம சேவையாளர் பிரிவில் 2 குடும்பங்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக முராவோடை கிராம உத்தியோகத்தர் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

மட்டக்களப்பின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் மாத்தறை மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துள்ளனர்.

நேற்று காலை முதல் மாத்தறை மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நேற்று காலை தொடக்கம் தொடர்ச்சியான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்திலும் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் , லாகுகல மற்றும் சியம்பலாண்டுவ ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது.

இந்த பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தால் பயிர்நிலங்கள் அழிவடையக்கூடும் என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்