கடும் காற்றுடன் பலத்த மழை: கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

கடும் காற்றுடன் பலத்த மழை: கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

கடும் காற்றுடன் பலத்த மழை: கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2018 | 9:46 pm

COLOMBO (News 1st) – எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மீனவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதல் காற்றுடன்கூடிய மழை பெய்து வருகின்றது.

இன்று காலை 8.30 நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அங்கு 135.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை காரணமாக மட்டக்களப்பு ஆஞ்சனேயபுரம் மற்றும் மீராவோடை தமிழ் கிராம சேவையாளர்பிரிவுகளில் 17 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆஞ்சனேயபுரம் கிராம சேவகர் பிரவில் 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வீடுகளில் வௌ்ளம் புகுந்துள்ளதால் இந்த 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் மீராவோடை தமிழ் கிராம சேவையாளர் பிரிவில் 2 குடும்பங்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சீரற்ற வானிலை நிலவுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், லாகுகல மற்றும் சியம்பலாண்டுவ ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகின்றது.

மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளதுடன், படகுகளும் வள்ளங்களும் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடற்றொழிலுக்குச் செல்லவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடும் காற்று காரணமாக யாழ்ப்பாணம் மண்டைத்தீவைச் சேர்ந்த மீனவர்களும் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

இதேவேளை, மலையகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பண்டாரவளை பகுதியில் பெய்யும் மழை காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்