வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக ஷீ ஜிங் பிங்

வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக பதவி வகிக்க சீன ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம்

by Staff Writer 11-03-2018 | 4:43 PM
COLOMBO (News 1st) - ஜனாதிபதி பதவிக்காலத்தை கட்டுப்படுத்தும் சட்டத்தை நீக்குவதற் அங்கீகாரம் கிடைத்துள்ளதால் வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங்கிற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இன்று நடைபெற்ற தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் வருடாந்த கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 2,964 பேர் ஆதரவாக வாக்களித்ததுடன் இருவர் எதிராக வாக்களித்தனர். மேலும் மூவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. சீனாவில் ஜனாதிபதியொருவர் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்க முடியும் என 1990 இல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. Mao Zedong போன்ற தனிநபர் ஆட்சியை தவிர்க்கும் வகையில் இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி பதவிக்காலத்தை கட்டுப்படுத்தும் சட்டத்தை நீக்குவதற்கான முன்மொழிவை கடந்த பெப்ரவரி மாதத்தில் கமியூனிஸ்ட் காங்கிரஸ் கட்சி முன்வைத்திருந்தது. சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங் 2023 இல் பதவி விலகவிருந்தமை குறிப்பிடத்தக்கது. புதிய திருத்தத்திற்கிணங்க சீன ஜனாதிபதி, வாழ்நாள் முழுவதும் ஆட்சியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.