ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக  தெரிவிப்பு

தனது தந்தையின் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவிப்பு

by Staff Writer 11-03-2018 | 7:52 PM
COLOMBO (News 1st) - இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சிங்கப்பூரிலுள்ள கல்வி நிறுவனமொன்றின் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். தமது தந்தையை கொலை செய்த குற்றத்தில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தீர்மானித்தமையை ராகுல் காந்தி நினைவுபடுத்தியுள்ளார். 2016ஆம் ஆண்டில் இந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்ததையும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். தமது தந்தையை கொலை செய்தவர்களை தாமும் தமது சகோதரி பிரியங்காவும் மன்னித்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருபவர்களை விடுதலை செய்வதற்கான சட்ட வழிவகைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தயாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் அண்டு மே மாதம் 21 ஆம் திகதி தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரொபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். https://www.youtube.com/watch?v=FR3K0IoMt40