by Staff Writer 11-03-2018 | 7:37 PM
COLOMBO (News 1st) - சர்வதேச சூரிய சக்தி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு இன்று முற்பகல் இந்தியாவில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டிருந்தார்.
இந்தியா தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள ராஷ்ரபதிபவனில் இன்று காலை இடம்பெற்ற சர்வதேச சூரிய எரிசக்தி மாநாட்டில் 45 நாடுகளைச் சேர்ந்த 121 அரச தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் நேற்று இந்தியாவை சென்றடைந்ததுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையம் சென்று அவரை வரவேற்றார்.
பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரின் அழைப்பினை ஏற்று இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இந்தியாவை சென்றடைந்த போது இந்திய வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போன்றே இலங்கையும் எரிசக்தி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற சர்வதேச சூரிய எரிசக்தி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பாரதப்பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் சூழலியல் செயற்திட்ட நிறைவேற்று பணிப்பாளர் எரிக் சொல்ஹேமை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
சூழல் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் எரிக் சொல்ஹேம் இதன்போது பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவித் தலைமையில் ஜனாதிபதி மாளிகைளில் நேற்றிரவு அரச தலைவர்களுக்கு விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=SGp8zlO8f2k