கண்டி சம்பவம் தொடர்பில் ஆராய விசேட குழு

கண்டி சம்பவம் தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி விசாரணைக் குழு

by Staff Writer 11-03-2018 | 7:26 PM
COLOMBO (News 1st) - கண்டியில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட ஜனாதிபதி விசாரணைக் குழுவை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து எதிர்வரும் 17 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளார். இதன்பின்னர் விசாரணைக் குழுவை நியமிப்பது தொடர்பான அனுமதி பெறப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் குறிப்பிட்டுள்ளார். கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நிலவிய மோதல் நிலைமை தொடர்பிலான விசாரணைகளுக்காக ஜனாதிபதி விசாரணை குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தீர்மானித்துள்ளார். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூவர் அங்கம் வகிக்கும் குழுவொன்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த குழுவினர், மோதலுக்கு அடிப்படையாக அமைந்த காரணங்கள், சட்டம் ஒழுங்கு மீறப்பட்டுள்ளதா, சம்பவங்களின் பின்புலத்தில் சதித் திட்டங்கள் உள்ளனவா என்ற விடயங்கள் குறித்து ஆராயவுள்ளனர். அத்தோடு இந்த சம்பவங்களின்போது உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளை வழங்குவது தொடர்பிலும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. https://www.youtube.com/watch?v=M5LfwLhLOhI