புகையிலைக்கு மாற்றுப் பயிர் செய்கை என்ன?

புகையிலை செய்கை தடை செய்யப்படுமாயின் அதற்கான மாற்றுப் பயிர்செய்கை என்ன?

by Bella Dalima 10-03-2018 | 7:08 PM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டிற்குள் புகையிலை செய்கை தடை செய்யப்படுமாயின் அதற்கான மாற்றுப் பயிர்செய்கை என்ன? யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தில் நீண்ட காலமாகவே புகையிலை பயிர்செய்கை சிறப்பான இடத்தை வகித்து வருகின்றது. புகையிலை ஒரு விவசாய உற்பத்திப் பொருளாக மட்டுமன்றி, உள்ளூரிலேயே உருவாக்கப்படக்கூடியதாக இருந்த சுருட்டுக் கைத்தொழிலுக்கும் மூலப்பொருளாக அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் 741.615 ஹெக்டெயர் நிலப்பரப்பில் 1,956 விவசாயிகள் புகையிலை செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். மாவட்டத்தில் சுமார் 3,035 குடும்பங்கள் மேற்படி புகையிலை செய்கையில் ஈடுபட்டு வருகின்றன. யாழ். குடநாட்டின் தீவகம் மற்றும் வடமராட்சி பகுதிகளில் அதிகளவில் புகையிலை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. வடக்கின் மொத்த விவசாய செய்கையாளர்களில் புகையிலை விவசாயத்தினை மேற்கொள்வோர் 10.87 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 2020ஆம் ஆண்டிற்குள் புகையிலை செய்கை முற்றாகத் தடை செய்யப்படும் என உலக சுகாதார ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்துள்ளது. புகையிலை தடை செய்யப்படுமாயின் தமது வாழ்வாதாரத்தினை முழுமையாக இழக்க வேண்டி ஏற்படும் என புகையிலை உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டனர். இந்த தடையின் மூலமாக நேரடியாகப் பாதிக்கப்படும் புகையிலை உற்பத்தியாளர்களுக்கான மாற்று பயிர்செய்கை என்ன என்பது இப்போது ஆராயப்பட்டு வருகின்றது. புகையிலை உற்பத்தி தடை விதிக்கப்படுமாயின் அதற்கான மாற்றுப் பயிர்களை விரைவில் அறிமுகப்படுத்தி அதற்கான பயிற்சிகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பல்லவா?