பிரான்ஸ், இந்தியா இடையே 14 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

பிரான்ஸ் - இந்தியா இடையில் 16 பில்லியன் டொலர் பெறுமதியான 14 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

by Bella Dalima 10-03-2018 | 4:41 PM
பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையில் 16 பில்லியன் டொலர் பெறுமதியான 14 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது மனைவி, பிரான்ஸ் தொழில் அதிபர்கள் மற்றும் அமைச்சர்களுடன் 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா சென்றுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவர்களை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். இன்று ஜனாதிபதி மாளிகையில் இம்மானுவேல் மெக்ரோனிற்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, பாதுகாப்பு, அணுசக்தி, இருநாடுகளுக்கும் இடையிலான இரகசியத் தகவல் பரிமாற்றத் தடுப்பு உட்பட 14 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.