எம்.கே. கசுனுக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல்

சண்டி மல்லியின் புதல்வரும் தென் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே. கசுனுக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல்

by Bella Dalima 10-03-2018 | 7:55 PM
Colombo (News 1st) தனியார் பஸ் சாரதி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுனும் அவரின் மனைவியும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை கடுவல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பத்தரமுல்ல - கொஸ்வத்த சந்திக்கு அருகில் தனியார் பஸ் சாரதி ஒருவர் மீது தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரின் மனைவி நேற்று முற்பகல் தாக்குதல் மேற்கொண்டனர். மாகாண சபை உறுப்பினரும் அவரின் மனைவியும் சென்ற கெப் வாகனத்திற்கு பஸ் சாரதி இடமளிக்கவில்லை என தெரிவித்து மாகாண சபை உறுப்பினரின் மனைவி சாரதியைத் தாக்கியுள்ளதுடன், அந்த சந்தர்ப்பத்தில் அவரின் கையில் துப்பாக்கி ஒன்றும் இருந்துள்ளது. கசுனும் அவரின் மனைவியும் நேற்று (09) கைது செய்யப்பட்டதுடன், பஸ் சாரதி முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கைது செய்யப்பட்டுள்ள எம்.கே.கசுன் முன்னாள் தென் மாகாண சபை அமைச்சர் எம்.கே. ரஞ்ஜித் எனப்படும் சண்டி மல்லியின் புதல்வராவார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நெருக்கமானவரான எம்.கே. ரஞ்ஜித் எனப்படும் சண்டி மல்லி, கோட்டை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து வௌியேறிய சந்தர்ப்பத்தில் திணைக்களத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.