கண்டி அசம்பாவிதம்: ஜனாதிபதி ஆணைக்குழு ஆராயவுள்ளது

கண்டி அசம்பாவிதம் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது

by Bella Dalima 10-03-2018 | 5:02 PM
Colombo (News 1st) கண்டி அசம்பாவிதம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கண்டி நிர்வாக மாவட்டத்தின் சில பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மை குறித்து ஆராய்வதற்கு ஆணைக்குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஓய்வுபெற்ற நீதிபதிகள் மூவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு அடிப்படையாக அமைந்த காரணி மற்றும் அதன்போது சட்டம் மற்றும் ஒழுங்கு உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி அசம்பாவிதத்தின் பின்புலத்தில் காணப்படும் சூழ்ச்சி மற்றும் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்பன குறித்தும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆராயவுள்ளது. மேலும், இந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதம், பொருட்சேதம் என்பன குறித்தும் ஆணைக்குழுவினூடாக மதிப்பீடு செய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாதிருப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆணைக்குழுவினூடாக ஆராயப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.